Friday, July 30, 2021

குறைந்தது 10 நபர்களுக்கு 
பார்வேர்ட் செய்யவேண்டும்;
இல்லையென்றால்
தினமும் 
உங்கள் கைபேசிக்கு  
ஒரு கவிதை 
அனுப்பி வைக்கப்படும்.

Thursday, July 29, 2021

வீட்டு மரக்கதவில் 
ஒரு பட்டாம்பூச்சி 
அமர்ந்திருந்ததைப் 
பார்த்தேன்;
கதவுக்கு முன் 
மரமாக இருந்தபோது 
என்ன கதையோ 
இவைகளுக்குள்
என்று,
பட்டாம்பூச்சி நகரும்வரை 
கதவை திறக்காமல்
அங்கேயே 
அமர்ந்திருக்கிறேன்.

Wednesday, July 28, 2021

மழைக் காலத்தில் 
எழுதப்படும் 
கவிதை, 
நதி.

இரவில்

குளத்தில் மிதக்கிறது, 

நிலா 

எடுத்துக்கொண்ட 

செல்பி.

Friday, July 23, 2021

ஆண்டு - 2500

ஏலியன்கள்,
மனிதர்களை 
மனிதனாகப் 
பார்க்காமல் 
ஸ்மார்ட் குரங்காகவே
பார்ப்பதை 
எதிர்த்து போராடவேண்டும் 
தோழர்களே.

Thursday, July 22, 2021

மரத்தின் 
நிழலில் நின்றேன்.
அந்த மரம் ஏன் 
நிற்கிறது என்று 
நான் 
கேட்கவேயில்லை.

Wednesday, July 21, 2021

மறுபிறப்பு பற்றிய 
திருக்குறள் படிக்கும்போது 
தோன்றுவது,
"நான் எத்தனை 
ஜென்மமாக 
இந்த குறளை 
படித்துக் கொண்டு
இருக்கிறேன்"
பழைய 
ஞாபகங்களை 
மறந்துவிட்டேன்.
இப்போது 
இந்த 
பாடல்களை 
மறக்கவேண்டும்.

Sunday, July 18, 2021

கோபுரத்தின் 
கண்ணாடி, 
கோவில் 
குளம்.

Saturday, July 17, 2021

வயதுக்கு 
வந்த 
தமிழ் 
வார்த்தை 
'காதல்' 

Wednesday, July 14, 2021

சரியாக 
பௌர்ணமிக்கு 
முந்தைய தினத்தில் 
'இன்று பௌர்ணமியா?'
என்று கேட்டால், 
நீங்களும் 
என் நண்பரே. 

Tuesday, July 13, 2021

இந்த உடலோடு 
எனக்கு 
ஒரு பிரச்சினை;
யாராவது 
என் பெயரை 
அழைத்தால், 
இது 
திரும்பிப் பார்க்கிறது. 
கடவுள் 
மனிதனுக்கு 
செய்யும் 
நீர் அபிஷேகம்,
மழை.
கனவில் தூங்கும் போது,
அது கனவு இல்லை;
அது நிஜம்.

Monday, July 12, 2021

கேள்விக்கு 
விடை,
சில நேரங்களில்
இன்னொரு 
கேள்வி.

Saturday, July 10, 2021

அவர்கள் 
இறந்து விடுகிறார்கள்;
அவர்களை நினைத்து 
நாம் தான் 
செத்துக் கொண்டிருக்கிறோம்.

Thursday, July 08, 2021

என் 
அனுமதி இல்லாமலே 
என் 
மடியில் அமர்ந்திருக்கிறது 
என் 
தொப்பை!
புத்தர் இப்போது 
பிறந்தால் 
சித்தார்த்தனாகவே
இருந்துவிடுவார்;
அனைத்து 
போதி மரமும் 
வெட்டப்பட்டுவிட்டது.

Wednesday, July 07, 2021

அடுத்த வருடம் முதல் 
வானவில் பார்த்தால்
18%  ஜிஎஸ்டி என்று 
அரசு அறிவித்ததும்,
பலபேர் முதல்முறையாக 
தேடித்தேடி  
வானவில் பார்க்கிறார்கள்.
வாயின் கட்டுப்பாடு அல்ல
மௌனம்;
காதின் கட்டுப்பாடு;

Monday, July 05, 2021

முதல்முறை
புத்தகத்தை 
முடிக்கவேண்டும் 
என்று படித்தேன்; 
மறுமுறை
அதே புத்தகத்தை
படித்து 
முடிக்கவேண்டும்.