Friday, December 31, 2021

கவிதை 
எழுதிக் கொள்ளலாம்;
நாளையும் 
வரத்தானே போகிறது
நிலா.

Thursday, December 30, 2021

காரை நிறுத்த 
போகும் நேரம்,
பிடித்த 
பாட்டை போடுபவர்கள் 
எல்லா 
ரேடியோ ஸ்டேஷன்லையும்
வேலை செய்கிறார்கள்.

Wednesday, December 29, 2021

நான் பாதுகாப்பான 
இடத்தில் 
அமர்ந்திருக்கிறேன்;
பாவம்
இந்த பூமி,
அந்தரத்தில் 
தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த
மூன்று காரணங்களும்
உங்கள் வாழ்க்கையை
பாதிக்காமல் 
பார்த்துக் கொள்ளவேண்டும்;
அதற்கு 
அந்த
மூன்று காரணங்களை
முதலில் நீங்கள்
கண்டுபிடிக்க வேண்டும்.

Tuesday, December 28, 2021

கண்ணால் 
பார்த்தால் தான் 
நம்புவேன் என்றால், 
நீங்கள் 
கடவுளை 
எப்படி 
பார்ப்பீர்கள்.

Monday, December 27, 2021

பட்டம் 
பெற்ற 
காற்று, 
இசை 
ஆகிறது.

Sunday, December 26, 2021

தண்டவாளத்தின் நடுவில் 
தேங்கிநிற்கும் தண்ணீரில் 
நிலவைப் பார்க்கிறேன்;
தற்கொலை 
செய்துகொள்ளப் போகிறதோ 
என்றெண்ணி 
சிறிய கல் எடுத்து அதனுள் 
எறிந்துவிட்டு செல்கிறேன்.

Saturday, December 25, 2021

யாரோ ஒருவருக்கு 
யாரோ போட்ட போஸ்ட்டை 
யாரோ ஒருவன் 
'லைக்' போடுகிறான்.
தூங்காதபோது 
வரும் கனவிற்கு 
நிஜம் 
என்று பெயர்.
யாருக்கும் 
உண்மை 
பிடிப்பதில்லை;
உண்மை போல  
இருப்பது 
பிடிக்கிறது;
நானும் 
கவிதை போல  
எழுதுகிறேன்.

Friday, December 24, 2021

அவள் கூந்தல் 
சுருள்முடி 
என் கையெழுத்தை 
நியாபகப்படுத்துகிறது.

Thursday, December 23, 2021

உங்களுக்கு 
தலைக்கனம் 
என்று 
யார் சொன்னாலும் 
நம்பாதீர்கள்;
உங்கள் 
தலையணை 
சொன்னால் மட்டும் 
நம்புங்கள்.

Wednesday, December 22, 2021

நானே மறந்தாலும், 
ஆண்டுதோறும் 
மறக்காமல் 
எனக்கு 
பிறந்தநாள் 
வாழ்த்து சொல்லும் 
என் 
பேஃக் ஐடி.

Tuesday, December 21, 2021

கனவில் இன்று
எல்லாம்  
சதுர வடிவம் 
ஆனது;
சதுரமான பனித்துளி;
சதுரமான நிலா;
சதுரமான பூமி;
சதுரமான மழைத்துளி;
சட்டென்று பதறி 
கண்விழித்தேன்;
நான் பார்த்தது, 
சதுர இட்லி.

Friday, December 17, 2021

இலைகளை 
இரசிக்க 
கற்றுக் கொண்டபின், 
நான் 
பூக்களுக்கு 
காத்திருப்பதில்லை.

Tuesday, December 14, 2021

ஒரு வட்டத்தில் 
அமர்ந்திருக்கும் 
பல வட்டம்போல்,
ஒரு  இருட்டுக்குள்   
பல  இருட்டுகள்    
ஒளிந்திருக்கின்றன.

Thursday, December 09, 2021

கடலிலிருந்து பிரிந்து 
ஒரு ஆறு 
மலை மேல் ஏறுகிறது;
நீர் எழுச்சி-யில் 
குளிக்க 
சென்று கொண்டிருக்கிறேன். 

Tuesday, December 07, 2021

முழுமையானது
என்ற ஒன்று 
இல்லவேயில்லை;
முற்றுப்பெறாத
ஒன்றுதான் 
முழுமையானது.
அதாவது ...
...

Monday, December 06, 2021

பல புத்தகம் 
படிக்காமல் 
இருந்தாலும், 
பிடித்த
புத்தகத்தை 
திரும்ப திரும்ப 
படிப்பது 
ஒருவகை 
புத்தகநோய்.

Sunday, December 05, 2021

இது 
உதவிக்கு 
மறுஉதவி;
ஒரு 
ஆலமர செடி 
முன் நின்று 
அதற்கு  
நிழல் 
தந்துக் கொண்டிருக்கிறேன்.